Search Engine Submission - AddMe

ஆசிரியர் பட்டதாரிகளுக்கு சில டிப்ஸ்...

ஆசிரியர் பட்டதாரிகளுக்கு சில டிப்ஸ்...



படித்தால் அரசு வேலை உறுதி என்ற நிலை மற்றப் படிப்புகளைக் காட்டிலும் ஆசிரியர் படிப்புக்கு உண்டு. இதனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.

2008-09-ம் கல்வி ஆண்டில் 545 எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், 2009-10-ம் கல்வி ஆண்டில் 645 கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. இது இந்தக் கல்வியாண்டில் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இதே போல் மாணவர்களின் எண்ணிக்கையும் 59 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர்களாக வெளியே வருகின்றனர்.

ஆனால் படிப்பை முடித்த பிறகு தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக கிராமத்து இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி இல்லை. இதனால் தங்களது பதிவு மூப்பை நழுவ விட்டுவிட்டு அரசு வேலை கிடைக்கவில்லையே... எனக்கு பின்னால் படித்தவர்களுக்கு வேலை கிடைத்து விட்டதே... என்று புலம்புபவர்களையும் பார்க்க முடிகிறது.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் கல்வியியல் கல்லூரித் தேர்வு நடந்து வரும் நிலையில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

பதிவுமுறை: இளநிலை பட்டப் படிப்புகளை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடலாம். ஆனால் முதுநிலைப் பட்டப் படிப்புகளை சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில்தான் பதிய முடியும்.

இதன்படி, இளநிலை பட்டப்படிப்பை முடித்து ஆசிரியர் கல்வியில் கல்லூரி பட்டப் படிப்பை முடித்த இளநிலை பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் பதிந்தால் போதும். அதாவது பி.எஸ்.சி., பி.எட்., பி.ஏ. பி.எட்., படித்தவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தால் போதும்.

இதன் பின்னர் எம்.எஸ்.சி. எம்.ஏ. படித்து முடித்தால் தங்களது கல்வித் தகுதியை சென்னையிலோ அல்லது மதுரையிலோ உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பி.எட்., படிப்பையும் அதனுடன் சேர்த்து பதிவு செய்வது அவசியம். அவ்வாறு பி.எட்., படிப்பை அங்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டால் முதுநிலை ஆசிரியருக்கான பணி வாய்ப்பு பறிபோய்விடும்.

இதே போல் எம்.எஸ்.சி., எம்.ஏ. படிப்பை முடித்த பிறகு பி.எட்., படிப்பை நிறைவு செய்பவர்கள் நேரடியாக சென்னை அல்லது மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிய விட்டுவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வாய்ப்பு பறிபோய்விடும்.

எனவே முதுநிலை பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்பவர்கள் கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முறைப்படி பதிவு செய்திருந்தால்தான் வாய்ப்பு வரும்போதும் பதிவு மூப்பு பட்டியலில் பெயர் வரும்.

நன்றி:தினமணி